| ADDED : பிப் 17, 2024 05:59 AM
தேனி: தேனி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எல்.பி.எப்., இடதுசாரி கூட்டணி தொழிச்சங்கங்கள் இணைந்து, மத்திய அரசு, தொழிலாளர், விவசாயிகளுக்கு விரோதமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வசதிசெய்து தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கனரா வங்கியை முற்றுகையிட போலீசாரிடம் அனுமதி கோரினர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நேற்று கம்பம் ரோடு பள்ளிவாசலில் இருந்து தேனி நேருசிலை வரை ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் ஞானவேல் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் சண்முகம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அமைப்புசாரா மாவட்ட செயலாளர் கணேசன், டி.யு.சி.சி., தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் காசிமாயன், ஏ.ஐ.யு.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால் தேனி - பெரியகுளம், தேனி மதுரை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 57 பெண்கள், 70 ஆண்கள் உட்பட 127 பேரை, தேனி போலீசார் கைது செய்தனர்.