குழாய் சேதமடைந்து 15 நாட்களாக குடிநீர் இன்றி மக்கள் அவதி; சிரமத்தில் தவிக்கும் தேனி நகராட்சி 12வது வார்டு பொது மக்கள்
தேனி : 'குழாய் சேதமடைந்ததால் 15 நாட்களாக குடிநீர் இன்றி தேனி 12வது வார்டு மக்கள் தவிக்கின்றனர். இங்கு பயன்பாடு இல்லாத வேளாண் விரிவாக்க மையத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களாலும், புதர் மண்டியுள்ள வளாகத்தில் பாம்புகள் உலாவுதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தேனி அல்லிநகரம் நகராட்சி 12வது வார்டில் ஸ்டாலின் தெரு அதன் குறுக்குத்தெரு, ரத்த வங்கி தெருக்கள் உள்ளன. இப் பகுதியில் கால்நடை நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், தேனி கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. அதற்கு அருகில் 12 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் வேளாண் விரிவாக்க மையம் கட்டடம் பாழடைந்துள்ளது. விரிவாக்க மைய வளாகம் பயன்பாடு இன்றி புதர் மண்டியுள்ளது. பயன்படுத்தபபடாமல் இருப்பதால் இங்கு இரவில் கஞ்சா போதை நபர்களின் புகலிடமாக விளங்குகிறது. தேனி-பெரியகுளம் மெயின் ரோட்டில் அரசு கட்டடம் பழாடைந்து சமூக விரோத செயல்களுக்கும், கழிப்பிடமாக பயன்படுவது வேதனையாக உள்ளது என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வார்டு மக்கள் கருத்து: குடிநீர் வழங்க வேண்டும்
அல்லிஉதயன், ஸ்டாலின் தெரு, தேனி: 15 நாட்களாக குடிநீர் எங்கள் தெருவிற்கு வினியோகிக்கப்பட வில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பகிர்மான குழாய், கேட்வால்வு சேதம் என அடிக்கடி கூறுகின்றனர். பகிர்மான குழாய் எங்கு சேதமடைந்துள்ளது என்பதை முறையாக ஆய்வு செய்து, அதனை சீரமைத்து குடிநீர் வழங்க நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு ரேஷன் கடையும் உள்ளது. தெருவின் வடகிழக்கு ரோடு பகுதி மேடாகவும், தெரு தாழ்வாக உள்ளதால் மழை காலங்களில் நீருடன் கழிவுகள் சேர்ந்து சாக்கடை கால்வாயை அடைத்துக் கொள்கிறது.இதனால் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழைநீர் தேங்காமல் செல்ல நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகத்தில் பாம்புகள் தஞ்சம்
மங்கம்மாள், ஸ்டாலின் தெரு, தேனி : எங்கள் தெரு பெயர் முதல்வர் ஸ்டாலின் பெயரில் உள்ளது. ஆனால் அவர் சுகாதாரமாக உள்ளது போல் பொதுமக்கள் இல்லை. குடிநீர் வினியோகம் செய்து 15 நாட்கள் ஆகிறது. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை நீடிக்கிறது. சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் வால் புழுக்கள் உற்பத்தியாகி, மழை காலங்களில் தெருவில் தேங்கும் தண்ணீருடன் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சாக்கடைகளை சீரமைக்க வரவேண்டும்.மேலும் வேளாண் விரிவாக்க மையம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் விஷப்பூச்சிகள் தொந்தரவால் பலர் பாதிக்கின்றனர். இதனால் வேளாண்துறை வளாகத்தை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பல அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ', என்றனர்.