| ADDED : பிப் 22, 2024 03:02 AM
ஆண்டிபட்டி:திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு முறைப்பாசன அடிப்படையில் வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.தேனி மாவட்டத்தில் பெய்த மழை, முல்லைப் பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஜனவரி 6ல் முழு அளவான 71 அடியாக உயர்ந்தது. அன்றைய தினமே ஆற்றின் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஜனவரி 23ல் நிறுத்தப்பட்டது. திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணையில் பிப்ரவரி 16ல் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 2000 கன அடி வீதம் திறந்து விடப்பட்டு, கால்வாய் வழியாக செல்கிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 69.95 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1034 கன அடியாகவும் இருந்தது.