பைபாஸ் ரோடு தடுப்பு சுவரில் ஆம்னி பஸ் மோதி 5 பேர் காயம்
பெரியகுளம்: சருத்துப்பட்டி ஜல்லிபட்டி பிரிவு பைபாஸ் ரோட்டில் ஆம்னி பஸ் ரோட்டோரம் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டம், தேனூரைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி 48. திருச்சி சிறுபத்தூர் தபால் நிலையம் பணியாளர். இவர் தனது பள்ளி நண்பர்கள் குடும்பத்துடன் தேக்கடிக்கு ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பஸ்சினை முசிறி அருகே ஆராய்ச்சியைச் சேர்ந்த யுவராஜ் 30, ஓட்டினார். நேற்று முன்தினம் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. திண்டுக்கல்-குமுளி பைபாஸ் ரோடு சருத்துப்பட்டி ஜல்லிபட்டி பிரிவு அருகே உயர் கோபுரம் மின் விளக்கு, சோலார் சிக்னல் பழுது காரணமாக அந்தப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் ரோட்டோரம் தடுப்பு தெரியாமல் ஆம்னி பஸ் சுவரில் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த கோசிகா 2, தியாகராஜன் 46, பவித்ரா 15, பிரபாகரன் 35, நிவேதா 23 ஆகிய 5 பேர் காயமடைந்தனர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் டிரைவர் யுவராஜிடம் விசாரிக்கின்றனர்.