| ADDED : பிப் 10, 2024 05:59 AM
தேனி: பாகப்பிரிவினை செய்யாததால் சித்தப்பாவை கத்தியால் குத்திய விவசாயிக்கு ஐந்தண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெரியகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பெரியகுளம் தாலுகா, தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணைக்கு செல்லும் ரோட்டில் உள்ள தோப்பில் வசிக்கும் விவசாயி குத்தாலிங்கம் 82. இவரது மூத்த சகோதரர் மாடசாமி 84. இவர்கள் இருவருக்கும் சொத்துக்கள் இருந்தன. பாகப்பிரிவினை செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் வத்தலக்குண்டுவில் வசிக்கும் மாடசாமி மகன் ராமமூர்த்தி 52, சொத்தினை பிரித்து கொடுக்குமாறு, சித்தப்பா குத்தாலிங்கத்தை கேட்டு தகராறு செய்தார். இதனால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த 2017 ஜூன் 1ல் ராமமூர்த்தி, அவரது நண்பர் துரைசாமியும் டூவீலரில் குத்தாலிங்கம் வீட்டிற்கு சென்றனர். அங்கு சொத்தினை பிரித்து தரக்கோரி தகராறில் ஈடுபட்டனர். பின் ஆத்திரமடைந்த ராம மூர்த்தி, குத்தாலிங்கத்தின் மார்பில் கத்தியால் குத்தினார். பலத்த காயம் அடைந்த குத்தாலிங்கம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தேவதானபட்டி போலீசார் ராமமூர்த்தி, துரைசாமி மீது வழக்குப் பதிந்து இவ் வழக்கின் விசாரணை பெரியகுளம் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் கற்பூரசுந்தர் ஆஜரானார். நேற்று விசாரணை முடிந்து, நீதிபதி மாரியப்பன், குற்றவாளி ராமமூர்த்திக்கு 5ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாத சிறை தண்டனை விதித்தும், வழக்கில் இருந்து துரைசாமியை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார்.