5100 ஏக்கர் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது; பி.டி.ஆர்., பெரியார் கால்வாய் விவசாயிகள் எதிர்பார்ப்பு
உத்தமபாளையம் : பி.டி.ஆர்., மற்றும் பெரியார் கால்வாய்களில் ஒருபோக பாசனத்திற்கென எப்போது தண்ணீர் திறந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.தேனி மாவட்டத்தில் மூல்லைப்பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்த 707 ஏக்கர் இருபோக சாகுபடி வசதி பெறுகிறது. இது தவிர 18 ம் கால்வாய் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது, 18 ம் கால்வாய் பாசனத்திற்கு ஆண்டிற்கு குறைவான நாட்களே தண்ணீர் அனுமதிக்கப்படுகிறது. கால்வாயில் வரும் நீரை குளங்கள் மற்றும் கண்மாய்களில் நிரப்பி கொள்ளவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் பயன்படும்.அதே போல ஒரு போக பாசனத்திற்கென 5100 ஏக்கர் நிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறக்கப்படும். இதன்மூலம் சின்னமனுார், வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, சீப்பாலக்கோட்டை, தாடிச்சேரி, தர்மாபுரி, வெங்கடாச்சலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால் பட்டி, கோவிந்த நகரம், பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன்பெறும். கடந்தாண்டு அணையில் போதிய அளவில் தண்ணீர் இருந்தும், அணையில் இருந்து உரிய நாளில் தண்ணீர் திறக்கவில்லை. தண்ணீர் திறக்காததை கண்டித்து அ.தி.மு.க ஒ.பி.எஸ். அணியினர் உத்தமபாளையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மறுநாள் டிச. 21 மாலை அமைச்சர் பெரியசாமி உத்தமபாளையம் அருகே ராமசாமி நாயக்கன்பட்டியில் உள்ள தலைமை மதகில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். விநாடிக்கு 100 கனஅடி வீதம் 30 நாட்களுக்கும், 60 நாட்களுக்கு முறை வைத்தும் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.ஆனால் இந்தாண்டும் பெரியாறு அணையில் போதிய அளவு 123. 80 அடி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 505 கனஅடி வரத்தும், 1300 கன அடி வெளியேறறப்படுகிறது. எனவே, ஒரு போக பாசனத்திற்கான தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.