| ADDED : நவ 19, 2025 06:28 AM
கம்பம்: கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தாததால் குப்பை குவிந்து மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். காலனி பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் தனித்தீவாக மாறியுள்ளது. கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டியில் 16 வார்டுகளை கொண்டுள்ளது. வடக்கு பகுதி தெருக்களில் சரளை கற்கள் பெயர்ந்து நடக்க கூட லாயக்கற்றதாக தெருவாக கரடுமுடாக உள்ளது. கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி செய்து விட்டு ரோடு அமைக்காமல் மண் வீதியாக வைத்துள்ளனர். இதனால் மழை காலங்களில் தெருவில் நடக்க முடியாத அவல நிலை உள்ளது. வடக்கு பகுதி தெருக்கள் அனைத்தும் சீரமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தேவைக்கு ஏற்ப பெண்கள் சுகாதார வளாகங்கள் இல்லை. யானை கெஜம் வீதிகளில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பு செய்தும் பயனற்ற நிலையில் உள்ளது. ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் பராமரிப்பு செய்தும் பயன்படுத்த அனுமதிக்காமல் உள்ளது. ஊராட்சி அலுவலகம் செல்லும் வீதி, ஊராட்சி பள்ளி பகுதி, ஆற்றுக்கு செல்லும் வீதி என எங்கும் குப்பை குவியல்களாக உள்ளன. இதனால் அருகில் வசிப்போர் அவதிக்குள்ளாகின்றனர். மெயின்ரோட்டில் பயன்பாட்டில் இருந்த ஊராட்சிக்கு நல்ல வருவாயை ஈட்டிய சமுதாய கூடம், தற்போது இடிக்கப்பட்டுள்ளது. விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதி இன்றி தவிக்கின்றனர்.வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருக்ளில் விடப்படுகிறது. வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவுநீர் கிழக்கு பகுதியில் தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள காலனியை ஊராட்சி இதுவரை கண்டு கொள்ள வில்லை. சாக்கடை வசதி இன்றி ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவு நீர் தேங்கி உள்ளது. இங்குள்ள சமுதாய கூடத்தின் கூரைகள் பெயர்ந்தும், சுவர்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. பெண்களுக்கான பொது கழிப்பறை இல்லை. மின்கம்பம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. காலனிக்குள் செல்ல முடியாத வகையில் மழை நீர் குளம் போல் தேங்கி தனித் தீவு போல் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இக் காலனியை ஒதுக்கியே வைத்துள்ளது. ஆக்கிரமிப்பில் சிக்கிய தெருக்கள் மொக்கராஜ், சமூக ஆர்வலர், சுருளிப்பட்டி: நாராயணத்தேவன்பட்டி- சுருளிப்பட்டிக்கும் இணைப்பு சாலை அமைக்க ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் அனுமதியுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு கம்பம், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் ரூ.47 லட்சத்தில் பாலம் கட்ட பூமி பூஜை போடப்பட்டு இதுவரை பணி துவக்கப்படவில்லை. பணி துவக்க வேண்டும். தெருக்கள் முழுவதும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மக்கள் பிரநிதிகள் பதவி காலம் முடிந்தும் ஊராட்சி நிர்வாகம் பணிகளில் கவனம் செலுத்துவதில்லை. அதிகாரிகள் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் யானை கெஜம் ரோடு புதுப்பிக்கப்பட வேண்டும். விவசாயிகள் தங்களது டூ வீலர்களில் சென்று வர முடியாமல் மண் பாதை குண்டும் குழியுமாக உள்ளது . சாக்கடைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வீடுகளுக்குள் புகும் மழைநீர் கருப்பசாமி, காலனிதெரு, சுருளிப்பட்டி : குடிநீர் சப்ளைக்கென பைப் லைன் அமைத்தனர். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. ஆற்று நீரை பம்ப் செய்து அப்படியே வழங்குவதை தவிர்த்து சுத்திகரித்து வழங்க வேண்டும். காலனிக்கு தெரு விளக்கு, ரோடு வசதி வேண்டும். மண்ரோடாக இருப்பதால் மழை நீர் வீடுகளுக்குள் வருகிறது. கண்டு கொள்ளாத தனித்தீவு சூசையம்மாள், காலனி, சுருளிப்பட்டி: சுருளிப்பட்டியில் காலனி தனித் தீவு போல் உள்ளதால் யாரும் கண்டு கொள்வதில்லை. சேமதடைந்த மின் கம்பம் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இரவில் வெளியே வர அச்சமாக உள்ளது. கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். சாக்கடை கட்டி தர வேண்டும், பெண்கள் பொது கழிப்பறை வசதி செய்திட வேண்டும்.