விபத்தில் சிக்கியும் மவுசு குறையாத டபுள் டெக்கர் பஸ்
மூணாறு: ' டபுள் டெக்கர்' பஸ் விபத்தில் சிக்கியும் அதன் மவுசு குறையாமல் பயணிகள் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர். மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த பஸ் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து தினமும் மூன்று முறை பஸ் இயக்கப்படுகிறது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆனயிரங்கல் அணையின் 'வியூ பாய்ண்ட்' வரை சென்று திரும்பும். செப்.12ல் மதியம் 12:30 மணிக்கு டிப்போவில் இருந்த 45 சுற்றுலா பயணிகளுடன் பஸ் சென்றது. ஆனயிரங்கல் வியூ பாய்ண்ட் சென்று விட்டு திரும்புகையில், மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் விபத்தில் சிக்கியது. பயணிகள் காயம் இன்றி தப்பினர். அச்சம்பவம் தொடர்பாக டிரைவர் பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பஸ்சில் சேதமடைந்த முன்பகுதி சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. மவுசு: ஏற்கனவே டிப்போவில் பஸ்சை நிறுத்த முயன்றபோது மேல் கூரையில் தட்டி இருமுறை கண்ணாடி சேதமடைந்தது. தற்போது விபத்தில் சிக்கியும் அதன் மவுசு குறையாமல் சுற்றுலா பயணிகள் அச்சம் இன்றி ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.