போடி ஸ்டேட் பாங்க் மெயின் ரோட்டில் வசிக்கும் டாக்டர்.சந்திரசேகர். இவரது மனைவி யசோதா. இத்தம்பதியினர் வீட்டைச் சுற்றிலும் 15 சென்ட் அளவில் தோட்டம் அமைத்து இயற்கை சாகுபடி முறையில் காய்கள், பழங்கள், மூலிகைச் செடிகள், பூத்துக்குலுங்கும் பூச்செடிகள், ஆக்ஸிஜன் தரும் பல்வேறு வகை மரங்கள் என, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுத் தோட்டத்தை பராமரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மன நிறைவு டாக்டர். எச்.சந்திரசேகர், போடி: இருவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இயற்கை மீது எப்போதும் ஆர்வம் அதிகம். வீட்டின் முன் பகுதியில் பந்தல் அமைத்தது மட்டும் இன்றி வளாகப் பகுதி முழுவதும் இரவில் பூக்கும் நைட் குயின், மனம் வீசும் மனோரஞ்சிதம், செண்பகம், பாரிஜாதம், பல்வகை வண்ணங்களில் பூக்கும் செம்பருத்தி, சரக்கொன்றை, அந்தோரியம், ரங்கூன் கீரிப்பர், அலமண்டா, சுகந்தி, ரோஜா, காகிதப்பூ மல்லிகை, நந்தியா வட்டம், கல் வாழை பூக்களும், சப்போட்டா. கொய்யா, மாதுளை, அன்னாசி, வாழை, மா, இன்டியன் ஹெட்ஜிஞ்சர், காக்டஷ், பெங்கால் கிளாக், ஒயின், கறிப்பலா, ஒன்றரை ஆண்டுகளில் 10 அடி உயரம் வளர்ந்து உள்ள பலாமரத்தில் காய்த்துள்ள பலாப்பழங்கள் உள்ளிட்ட பல வகைகளை 30 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினர் ஒற்றுமையோடு வளர்த்து வருகின்றோம். கேரளா, ஏற்காடு, மங்களூரு என சுற்றுலா செல்லும் போதெல்லாம் அங்கு காணப்படும் அரியவகை பூக்கள், பல வகை பழமரங்களின் நாற்றுகளையும், பெரியகுளம் தோட்டக்கலைத் துறை மூலம் நடத்தும் கண்காட்சிகளில் வித்தியாசமான செடிகளை வீட்டிற்கு வாங்கி வந்து, நட்டு பராமரித்து வளர்த்து வருகிறோம். ஆட்கள் மூலம் தோட்டச் செடிகளை பராமரித்து வருகின்றோம். இயற்கையோடு இணைந்து வாழ்வதால் வீட்டுத் தோட்டம் எங்களுக்கு மன நிம்மதியை தருகிறது., என்றார். இயற்கை உரம் சி.யசோதா, குடும்பத் தலைவி, போடி: வீட்டில் பூத்துக் குலுங்கும் பூக்கள், காய்கள், பழங்கள், மணத்தக்காளி, துளசி. கற்றாழை, மருதாணி உட்பட 150 க்கும் மேற்பட்ட செடிகள், பல்வேறு மரங்களை வளர்த்து இயற்கை முறையில் பராமரித்து வருகின்றோம். இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் வீட்டில் தரையோடு அமைத்துள்ள சிமென்ட் தொட்டியில் மரங்கள், செடிகளில் இருந்து உதிரும் இலைகள், வீட்டில் பயன்படுத்தும் காய்கறிக் கழிவுகளை கொட்டி வருகின்றோம். மண் புழுக்கள் உருவாகாமல், கழிவுகள் கெட்டுப் போகாமல் இருக்க உப்பு, யூரியாவை கலந்து 30 நாட்களுக்கு மேல் மக்க வைக்கின்றோம். பொட்டாஷ், யூரியா, வேப்பம் புண்ணாக்கு 1:2 விகிதத்தில் கலந்து இயற்கை உரமாக உருவாக்கி பயன்படுத்துகிறோம். இதனால் செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி, செடிகளை வளர உதவுகின்றன. பூத்துக் குலுங்கும் வண்ண பூக்களில் உள்ள தேனை உறிஞ்ச தேன்சிட்டு, குயில், மைனா உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கின்றன. இந்தப் பறவைகளால் அவ்வப் போது எழுப்பப்படும் ரீங்காரங்கள் மனதை இதமாக்கும் இசையாக உள்ளதால் மன அழுத்தம் பறந்து போகிறது. குடும்பத்தினரின் நீடித்த நிலையான ஆரோக்கியமும், மனதிற்கு மகிழ்ச்சியும் எப்போதும் சீராக கிடைக்கிறது., என்றார்.