காலில் காயத்துடன் திரியும் காட்டு யானை
மூணாறு : மாங்குளம் ஊராட்சியில் ஆனக்குளம் பகுதியில் காலில் பலத்த காயத்துடன் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெண் காட்டு யானை நடமாடி வருகின்றது.மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் ஆனக்குளம் பகுதியில் உள்ள ஆற்றில் நீர் அருந்த 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக வந்து செல்லும். அவ்வாறு வந்த யானைகளில் பெண் யானை ஒன்று உடல் சோர்வுடன் காணப்பட்டது. அதன் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்கவும், தீவனம் தேடவும் இயலாமல் உடல் நிலை பதிக்கப்பட்டதாக தெரியவந்தது. அது குறித்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தபோதும், யானை வனத்தினுள் சென்றதால் கண்டு பிடிக்க இயலவில்லை. மலையாற்றூர் வன பிரிவு கால்நடை டாக்டர் பினோய் தலைமையில் மருத்துவ குழு யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட பகுதியில் முகாமிட்டுள்ளனர் என மாங்குளம் வனத்துறை அதிகாரி சான்ரீடோம் தெரிவித்தார்.