ஜம்புலிப்புத்துார் கோயில் தெப்பம் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தில் கிடக்கும் குப்பை, புல், செடிகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 800 ஆண்டுகளைக் கடந்த பழமையான இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல லட்சம் செலவில் கோயில் சீரமைக்கப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. தனியார் பங்களிப்பில் சிதிலமடைந்த நிலையில் இருந்த தெப்பம் சில லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறும் நீர் தெப்பத்தில் தேங்கும்படியாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் பெய்த மழையில் தெப்பத்தில் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது. கோயில் தெப்பத்தில் தேங்கிய குப்பை, முளைத்துள்ள புல், செடி கொடிகள் கடந்த சில மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது. குப்பையால் தெப்பத்தில் தேங்கும் நீருக்கு பாதிப்பு ஏற்படும். தெப்பத்தில் முழு அளவில் நீர் தேங்கும் முன், தெப்பத்தை சுத்தப்படுத்த ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.