அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மணமக்களுக்கு பட்டு சேலை, வேட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி பேச்சு
கம்பம்:' அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மணமக்களுக்கு பட்டு பட்டுச்சேலை, பட்டு வேட்டி அறிமுகம் செய்யப்படும்,'என தேனி மாவட்டம், கம்பம் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது : 2026 தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அதற்கு இங்கு கூடியுள்ள கூட்டமே சாட்சி. அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தில் 11 ஆயிரம் ஏரிகள், கண்மாய்களை தூர் வாரினோம். அதில் கிடைத்த வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். இன்று சுழற்சி முறையில் சப்ளை தருகின்றனர். இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அ.தி.மு.க. பொறுப்பேற்றவுடன் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது: முல்லைப் பெரியாறு அணை பற்றி முதல்வர் ஸ்டாலின் கவலைப்படுவதே இல்லை. இண்டி கூட்டணியில் காங். கம்யூ கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அந்த கூட்டணியில் இருக்கும் தி.மு.க. அவர்களிடம் பேசி ஏன் பேபி அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களை காக்க வேண்டிய போலீசிற்கே தற்போது பாதுகாப்பு இல்லை. இன்று பேரூராட்சி தலைவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழங்கு முற்றிலும் சீரழிந்து விட்டது. அ.தி.மு.க., அரசில் சட்டத்தின் ஆட்சி நடந்தது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி பல மடக்கு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் கொள்முதல் செய்து, கூட்டுறவு பண்டகசாலை மூலம் விற்பனை செய்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருந்தோம். 52 லட்சம் குடும்பங்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இப்போது அந்த திட்டம் இல்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மணமகனுக்கு பட்டு வேட்டி சட்டை, மணமகளுக்கு பட்டு சேலை என்று அறிமுகம் செய்யப்படும். ரூ. 7300 கோடியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கினோம். அதையும் ரத்து செய்து விட்டார்கள். ஒப்பிட்டு பாருங்கள் அ.தி.மு.க. ஆட்சியையும் தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு சிறப்பானது என்பது தெரியும். தி.மு.க. ஆட்சி ஒரு குடும்ப ஆட்சி. அது ஒரு கம்பெனி. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பொறுப்பிற்கு வர முடியும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இப்போது இன்ப நிதியும் வந்து விட்டார். கருணாநிதி என்ன ராஜ பரம்பரையா. அ.தி.மு.க.,வில் அப்படி இல்லை. சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளர் ஆகலாம். எம்.பி. எம்.எல்.ஏ., ஆகலாம். ஏன் முதல்வர் ஆகலாம். எனவே வரும் தேர்தலில் மக்களை காக்க அ.தி.மு.க. வை ஆதரியுங்கள். இவ்வாறு பேசினார். காரை வழி மறிக்க முயற்சி கம்பம் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி தேனியில் இருந்து பிரசார வாகனம் மூலம் கம்பம் வந்தார். மாலை 5:-50 மணியளவில் அனுமந்தன்பட்டி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்த போது, 20 பேர் கொண்ட கும்பல் வழிமறிக்க முயன்றனர். போலீசார், அவர்களை அப்புறப் படுத்தினார்கள். வாகனம் நிற்காமல் சென்றது. அப்போது அவர்கள், ஒன்றிணைவோம், ஒன்றிணைவோம் என்று கோஷமிட்டனர். வழி மறித்தவர்கள் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.