மரக்கிளை ரோட்டில் கிடப்பதால் ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல்
பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை செல்லும் ரோட்டை ஆக்கிரமித்து மரக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் ஆம்புலன்ஸ் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் துவங்கும் தென்கரை தெற்குதெரு ஒன்றரை கி.மீ., தூரம் உடையது. முத்துராஜா தெரு இணைப்பு ரோட்டில் முடிகிறது. முக்கியத்துவமான இந்த ரோட்டில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த ரோடு வழியாக ஆம்புலன்ஸ் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த ரோட்டில் 'பெரியகுளம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்'முன்புறம், அந்தப்பகுதியில் வீடு மராமத்து பணிகளை மேற்கொள்பவர்கள், மரக்கிளைகளை வெட்டி ரோட்டில் போட்டுள்ளனர். இதனால் 20 அடி அகலமான ரோட்டில், 10 அடியை மரக்கிளை ஆக்கிரமித்து ஒரு வாரமாக கிடக்கிறது. இதனால் ஆம்புலன்ஸ் செல்ல சிரமம் அடைகின்றன. அந்தப்பகுதி 23 வது வார்டு கவுன்சிலர் குமரன் மற்றும் பொதுமக்கள் நகராட்சியில் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை இல்லை. அவசரம், அவசியம் கருதி நகராட்சி மரக்கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.-