ஆந்திர நாவல் பழம் கிலோ ரூ.300க்கு விற்பனை
ஆண்டிபட்டி: ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் நாவல் பழம் ஆண்டிபட்டியில் கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள ஏத்தக்கோயில், மறவபட்டி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, வண்டியூர் பகுதிகளில் நாட்டு ரக நாவல் மரங்கள் உள்ளன. இப்பகுதியில் நாவல் பழங்கள் காய்ப்பு இன்னும் துவங்கவில்லை. உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதாக பலரும் சீசனில் கிடைக்கும் நாவல் பழங்களை விரும்பி சுவைப்பர். தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒட்டு ரக நாவல் பழங்களை வியாபாரிகள் ஆண்டிபட்டி பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அளவில் சற்று பெரிதாக இருக்கும் இந்த நாவல் பழங்கள் தற்போது கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் ஆண்டிபட்டி பகுதியில் விளையும் நாட்டு ரக நாவல் பழங்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனைக்கு கிடைக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.