தமிழகத்தில் தனியார் மூலம் ஆக.15 டிஜிட்டல் கிராப் சர்வே * ஆக., 15 ல் துவங்க ஏற்பாடு
தேனி: தமிழகம் முழுவதும் பயிர் சாகுபடியை கணக்கிடும் 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிகள் தனியார் மூலம் ஆக.,15 முதல் துவக்க வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சர்வே பணியில் 3.44 கோடி உட்பிரிவு நிலங்களில் சாகுபடி பயிர்கள் கணக் கிடப்பட உள்ளது. ஆடி, கார்த்திகை, கோடை பட்டங்களில் சாகுபடி செய்யும் பயிர்களை கணக்கிட 'கிராப் சர்வே' பணிகள் கடந்தாண்டு துவங்கப்பட்டது. ஒவ்வொரு உட்பிரிவிலும் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கணக்கெடுப்பது நோக்கம். சாகுபடி நிலத்தில் இருந்து அதன் விபரங்களை செயலியில் பதிவேற்ற வேண்டும். இதற்கு வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்தாண்டு ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் கணக்கிட முடியவில்லை. பின் கார்த்திகை, கோடை பட்டங்களில் வேளாண் துறையினர் அந்தந்த மாவட்ட வேளாண், தோட்ட கல்லுாரி மாணவர்கள் மூலம் 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிகளை மேற்கொண்டனர். தேர்வு நேரத்தில் சர்வே பணி என்பதால் எதிர்ப்பும் கிளம்பியது. இந்தாண்டு தனியார் மூலம் பணிகளை மேற்கொள்ள வேளாண் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தனியார் நிறுவனம் மூலம் 3.44 கோடி உட்பிரிவு நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கணக்கிடப்பட உள்ளன. ஆக.,15 முதல் செப்., 15 வரை நடக்க உள்ள இந்த பணியில் ஒரு உட்பிரிவுக்கு ரூ. 20 வீதம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது. மாவட்டம் வாரியாக மதுரை 12.70 லட்சம், திண்டுக்கல் 12.08 லட்சம், தேனி 4 லட்சம், ராமநாதபுரம் 11.30 லட்சம், சிவகங்கை 13.22 லட்சம், விருதுநகர் 10.68 லட்சம் என உட்பிரிவுகள் உள்ளன,'' என்றார்.