தேனியில் ஏ.டி.எம்., மெஷினை உடைத்து திருட்டு முயற்சி
தேனி:தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்., மெஷினை உடைத்து, பணம் திருட முயற்சித்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.தேனி மதுரை ரோட்டில் ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் தெரு உள்ளது. இங்கு எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று முன்தினம் இரவு மது போதையில் அத்தெருவில் நடந்து வந்த 19 வயது வாலிபர், கடைகளை நோட்டமிட்டார். பின், எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மெஷினின் உட்புறம் சென்று, சிறிது நேரம் துாங்கினார். அதிகாலை அருகில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்., மெஷின் உள்ள அறைக்கு சென்றார்.அங்குள்ள கேமராவை திருப்பி, அதன் மீது காகிதத்தை ஒட்டி மூடினார். பின் கற்கள், கம்பியால் ஏ.டி.எம்., மெஷினின் மானிட்டர் பகுதியை உடைத்தார். பணம் உள்ள மெஷினின் அடிப்பகுதியை உடைக்க முடியவில்லை. இதனால் அவர் திருப்பிச் சென்றுவிட்டார். காலையில் அருகில் உள்ள கடைக்காரர்கள் ஏ.டி.எம்., சேதப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேனி கூடுதல் எஸ்.பி., கேல்க்கர் சுப்ரமண்ய பாலசந்ரா, இன்ஸ்பெக்டர் ராமலட்சமி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, தப்பிச் சென்றவரை தேடி வருகின்றனர்.