சுருளி அருவியில் 10வது நாளாக குளிக்க தடை: பயணிகள் அவதி
கம்பம்: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து நேற்றுடன் 10 நாட்களை கடந்துள்ளது. தகவல் தெரியாமல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து பின் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தினமும் நூற்றுக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வார்கள். அடிக்கடி மழை வரும் போது, வெள்ள நீர் வருவதால், குளிக்க தடை விதிப்பது வழக்கம். கடந்த அக். 17 ல் பெய்த கனமழை காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளம் வந்தது.இதனால் வனத்துறை அருவியில் குளிக்க தடை விதித்தனர். தற்போது மழை இல்லையென்றாலும் அருவியில் விழும் தண்ணீரின் அளவு குறையவில்லை. இதனால் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்கின்றனர். இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், ' கனமழையால் மேகமலையில் உள்ள மணலாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பியது. இதனால் மணலாறு அணையின் ஷட்டர்களை தூக்கி தண்ணீரை சுருளி அருவியில் விட்டனர். அணைக்கு நீர் வரத்து தொடர்வதால், ஷட்டர்களை அடைக்கவில்லை. எனவே சுருளி அருளியில் விழும் தண்ணீரின் அளவும் குறைய வில்லை. இன்னும் 2 நாட்களில் மணலாறு அணையின் ஷட்டர் இறக்கப்படும். அப்போது அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்கின்றனர். அருவியில் விதிக்கப்பட்ட தடை பற்றிய தகவல் சரிவர தெரியாமல், சுற்றுலா பயணிகள் தினமும் அருவிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.