சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி
கம்பம்: மேகமலை பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆறு நாட்களுக்கு பின் தண்ணீர் வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளது. மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, துாவானம், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடந்த மே 26ல் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வெள்ளப் பெருக்கு குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கினர். இருந்த போதும் நேற்று காலை அருவியில் குளிக்க குறைந்த அளவிலான பயணிகள் வந்திருந்து, மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.