தகிக்கும் கோடை வெயிலில் கருகும் வெற்றிலை கொடிகள்
சின்னமனூர் : தகிக்கும் கோடை வெயிலில் வெற்றிலை கொடிகள் தாக்கு பிடிக்க முடியாமல் கருகி வருகிறது. வெற்றிலையின் மேல் கரும் புள்ளிகள் ஏற்பட்டு வீணாகி வருகிறது.மாவட்டத்தில் சின்னமனூர், பெரியகுளம் வட்டாரங்களில் மட்டுமே வெற்றிலை சாகுபடியாகிறது. வெள்ளை வெற்றிலை பெரியகுளத்திலும், கருப்பு வெற்றிலை சின்னமனூரிலும் சாகுபடியாகிறது.கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தகிக்கிறது. இதனால் சின்னமனூரில் கொடிக் கால்களில் வெற்றிலை கொடிகள் கருகி வருகிறது. போர் தண்ணீர் பாய்ச்சிய போதும், அதிக வெப்பம், இடையிடையே பெய்யும் லேசான மழை காரணமாக மண் சூடாகி, கொடிகள் கருகி வருகிறது. மேலும் வெற்றிலையின் மீது கறுப்பு புள்ளிகள் காணப்படுகிறது. இதனால் வெற்றிலையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.வெற்றிலை கொடிக்கால்களில் எழுந்துள்ள இந்த சூழல் காரணமாக விவசாயிகள் கவலையில் உள்ளனர். விலையும் வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.300 ல் இருந்து ரூ.280 ஆகவும், கறுப்பு ரூ.220 ல் இருந்து 190 ஆகவும் விலை குறைந்து விட்டது.கொடிக் கால் விவசாயி ரவி கூறுகையில், இடையிடையே லேசாக மழை பெய்து, தற்போது அதிக வெப்பம் நிலவுவதால் மண் சூடாகி வெற்றிலை கொடிகள் கருகியுள்ளது. இதனால் வெற்றிலை விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது என்றார்.