| ADDED : பிப் 17, 2024 06:05 AM
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ராட்டினங்களுடன் கூடிய பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க ரூ.2.55 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இது கடந்தாண்டு ஏலத்தை விட ரூ.59.40 லட்சம் கூடுதலாக தொகைக்கு விடப்பட்டது.ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயில் சித்திரை திருவிழா மே 7 முதல் 14 வரை நடைபெறும். திருவிழாவில் தினமும் லட்சகணக்கான பக்தர்கள் திரள்வார்கள். பக்தர்களின் பொழுபோக்கிற்கான ராட்டினங்கள் அமைத்தல், உணவு விற்பனை கடைகள் அமைத்தல், முடி காணிக்கை வசூல் பணிகளுக்கான ஏலம் நேற்று வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி தலைமை வகித்தார். அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், செயல் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். 15க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் பங்கேற்றனர். இதில் ரூ.4.62 லட்சத்திற்கு கண் மலர் விற்பனையும், ரூ.28,79,800க்கு உணவு கூடங்கள் அமைக்கவும், ரூ.10.61 லட்சத்திற்கு முடி காணிக்கை வசூலிப்பதற்கான ஏலம் விடப்பட்டது.பொழுது போக்கு அம்சங்களாகன ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலத்தில் ரூ.2 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரத்திற்கு தேனியை சேர்ந்த அம்மன் அம்யூஸ்மென்ட் நிறுவனம் டெண்டர் கோரியதை உறுதி செய்தனர். இது கடந்தாண்டை விட ரூ.59.40 லட்சம் கூடுதல் தொகையாகும். ஏல ஏற்பாடுகளை கோயில் மேலாளர் சுப்பிரமணியம், கணக்காளர் பழனியப்பன், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.