தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஆக., 8 சென்னையில் முற்றுகை டிட்டோ ஜாக் மாநில துணை பொதுச்செயலாளர் தகவல்
தேனி:''பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து ஆக.,8 சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, தேனியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) மாநில துணை பொதுச்செயலாளர் முருகன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பகுதி நேர, சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். நியமன ஒப்புதல் வழங்காமல் சம்பளம் இன்றி பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உடனே நியமன ஒப்புதல் வழங்க வேண்டும். மாநிலம் முழுதும் காலியாக உள்ள தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி நிரப்ப வேண்டும்.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்தில் இருந்து உயர்கல்வி கற்றிருந்தால் ஊக்க ஊதியம் வழங்குவோம் என்பது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. அதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திட நிபுணர் குழு அமைத்து ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைக்கு கொண்டு வருவோம் என முதல்வர் ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓட்டுக்களை பெற்றார். ஆனால் வெற்றி பெற்ற பின் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் தி.மு.க., அரசை புறக்கணிக்கும் நடவடிக்கையை மக்கள் எடுப்பார்கள்.பிரசார பயணம் துவக்கியுள்ள எதிர்கட்சி தலைவர் பழனிசாமியும் எங்கள் கோரிக்கைகள் குறித்து பேச மறுக்கிறார். எனவே ஆக.,8 ல் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஒன்று திரட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட உயர்மட்டக்குழு முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்க ஜாக்டோ ஜியோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.