போடி குண்டேரி - பனங்கோடை ஆக்கிரமிப்பு: விவசாயிகள் சிரமம்
போடி : போடி அருகே குண்டேரி - பனங்கோடை செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் விளை பொருளை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்டவை குண்டேரி - பனங்கோடை மலைக் கிராமம். இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காபி, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பணப் பயிர்கள் பயிரிட்டுள்ளனர். வனத்துறைக்கு சொந்தமான மண் ரோட்டில் விவசாயிகள் நடந்து சென்றனர். தற்போது இப்பாதையின் இருபுறமும் முட்புதர்களாக உள்ளது. இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு நடந்து செல்லவும், விளை பொருட்களை கொண்டு வரவும் சிரமம் அடைந்து வருகின்றனர். குண்டேரி - பனங்கோடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை சீரமைத்திட வனத்துறையினரிடம் விவசாயிகள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதனால் விளை பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு வர முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.விவசாயிகள் பயன்பெறும் வகையில் குண்டேரி - பனங்கோடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை சீரமைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.