தேனி:தேனி மாவட்டத்தில் அரசு நில அபகரிப்பு குறித்து பெரியகுளம் முன்னாள் சப் - கலெக்டர் ரிஷப் விசாரித்தார். வடவீரநாயக்கன்பட்டியில், 1.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 109 ஏக்கர், தாமரைக்குளத்தில், 60.55 லட்சம் ரூபாய் மதிப்பு 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில், 8.62 கோடி ரூபாய் மதிப்பு 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்டது தெரிய வந்தது.இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டன. இந்நிலங்கள் 'அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தப்பட்டு, மோசடியாக பட்டா வழங்கப்பட்டதும், அதன் மூலம் அபகரிக்கப்பட்டதும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. வழக்கு பதிவு
இதுதொடர்பாக 2021 டிச., 25ல் பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.,க்களாக பணிபுரிந்த ஜெயப்பரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், அ.தி.மு.க., முன்னாள் ஒன்றியச் செயலர் அன்னபிரகாஷ் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தாசில்தார் உட்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ளனர். இந்நிலையில், வடவீநாயக்கன்பட்டி நிலத்தை அபகரித்த வழக்கில் தொடர்புடைய பின்னத்தேவன்பட்டி மேற்குத் தெரு ஈஸ்வரன், 46, முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இரு நீதிமன்றங்களும் மனுக்களை தள்ளுபடி செய்தன. இதனால் சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., சரவணன் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் ஈஸ்வரனை நேற்று முன் தினம் கைது செய்தனர். பத்திரப்பதிவு
போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்டுள்ள ஈஸ்வரன், விவசாயம் செய்கிறார். செங்கல் சூளையும் நடத்துகிறார். 'வடவீரநாயக்கன்பட்டியில் அரசு நிலத்தை செல்வேந்திரன் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து மோசடி செய்துள்ளார்' என்றனர்.