இரவில் பார் ஆக மாறும் பஸ்ஸ்டாண்ட்
கூடலுார் : கூடலுார் புது பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில் குடிமகன்கள் 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். கூடலுார் புது பஸ் ஸ்டாண்ட் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு வந்தது. பகலில் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்கிறது. இரவு 9:00 மணிக்கு மேல் உள்ளே வராமல் நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். அதனால் இரவு முழுவதும் குடிமகன்கள் பஸ் ஸ்டாண்டை 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். உயர் கோபுர விளக்கை தவிர அனைத்து லைட்டுகளும் எரியாமல் இருப்பது குடிமகன்களுக்கு சாதகமாகி விட்டது. இரவில் ஆங்காங்கே விட்டுச் சென்ற மது பாட்டில்களை காலையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் கட்டப்பட்டுள்ள 10 கடைகள் மற்றும் டூவீலர் ஸ்டாண்டை விரைவில் டெண்டர் விட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பஸ்கள் இரவில் பஸ்ஸ்டாண்டிற்குள் செல்ல நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்ட அரசு நிதி வீணாகும் நிலை உருவாகி விடும்.