| ADDED : பிப் 06, 2024 12:29 AM
மூணாறு : மூணாறு ஊராட்சியில் இரண்டு வார்டுகளில் பிப்.22ல் நடக்கும் இடைத்தேர்தலுக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இந்த ஊராட்சியில் 11(மூலக்கடை), 18 (நடையார்) ஆகிய வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தேர்தல் கமிஷன் அக்.12ல் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அந்த வார்டுகளில் பிப்.22ல் இடைத் தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று 14 வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியான தாலுகா புள்ளியல் துறை அதிகாரி ஷிஜினிடம் வழங்கப்பட்டது.11ம் வார்டில் காங்கிரஸ் சார்பில் நடராஜன், இடது சாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த ராஜ்குமார், பா.ஜ. சார்பில் சுபாஷ், 18ம் வார்டில் காங்., சார்பில் லெட்சுமி , இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூ., சேர்ந்த நவநீதம் உள்பட 14 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதில் 11ம் வார்டில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிடும் ராஜ்குமார் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியுற்று தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் 18ம் வார்டில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிடும் நவநீதம் அதே வார்டில் கடந்த தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரவீணாவின் கணவர் ரவிகுமாரின் தாயார் என்பது குறிப்பிடதக்கது.