புனரமைத்த கண்மாய் கரைகளை பராமரிப்பது அவசியம் சின்னமனுார் பொதுமக்கள் வலியுறுத்தல்
சின்னமனுார்: சின்னமனுாரில் சங்கலிதேவன், விஸ்வன்குளம் கண்மாய்கள் ரூபாய் பல கோடி செலவில் புனரமைப்பு செய்ததன் விளைவாக வீட்டு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இக் கண்மாய் கரைகளை தொடர்ந்து பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சின்னமனுாரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சங்கிலிதேவன் கண்மாய், விஸ்வன்குளம் கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது. 3 ஆண்டுகளுக்கு முன் இரு கண்மாய்களையும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சங்கிலிதேவன் கண்மாய் ரூ.1.31 கோடியிலும், விஸ்வக்குளம் கண்மாய் ரூ.73.70 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி புனரமைத்தது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாய்களை சுற்றிவேலியும், நடைப்பயிற்சிக்கென நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் காலை,மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் விஸ்வக்குளத்தில் ஆகாயத்தாமரை வளர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. பாதுகாப்பு வேலிகள் சேதமடைந்துள்ளது. சாக்கடை கழிவு நீர் தேங்குகிறது. சங்கிலித்தேவன் கண்மாய் பக்கவாட்டில் செடி கொடிகள் வளர்ந்து நடைபயிற்சிக்கு இடையூறாக உள்ளது. இரவில் குடிகாரர்கள் தொல்லை உள்ளது. கண்மாய் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டது நல்ல நடவடிக்கை என்றாலும், தொடர்ந்து பராமரிக்க வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் லோகேந்திரராஜன், சின்னமனூர் : சங்கிலிதேவன் மற்றும் விஸ்வன்குளம் கண்மாய்களுக்கு மழை காலங்களில் உபரி நீர் வருகிறது. உபரி நீர் சின்ன வாய்க்காலுக்கு செல்லும். பாசனத்திற்கு பயன்படாது. நகரின் மையப்பகுதியில் கண்மாய் உள்ளதால் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைவது இல்லை. இதனால் மின்நகர், வ.உ.சி.நகர், எரசக்கநாயக்கனுார் ரோடு உள்பட நகர் முழுவதும் வீட்டு கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர கண்மாய்கள் பயன்படுகிறது. நகராட்சி கண்மாய்களை புனரமைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல நடவடிக்கை. இதில் கழிவுநீர் கலக்காமலும், அசுத்தமடையாமல் பாதுகாக்க வேண்டும். நடைபாதைய சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், நடைபயிற்சி செய்வோருக்கு குடிநீர் வசதியும், பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும். பாராட்ட தக்க நடவடிக்கை விஜயராமன், சின்னமனூர் : சின்னமனுார் நகருக்குள் உள்ள 5.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரு கண்மாய்களை நகராட்சி ஆக்கிரமிப்பு அகற்றி பராமரிப்பு செய்து வேலி அமைத்தது பாராட்டுக்குரியது. நகராட்சியை குறை சொல்வதை விடுத்து, பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். இங்கு நடைப்பயிற்சிக்கு காலை, மாலையில் அதிகளவு பொதுமக்கள்,பெண்கள் வருகின்றனர். அவர்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கு கண்மாய்யை சுற்றிலும் இருக்கை வசதி செய்திட வேண்டும். விஸ்வக்குளம் கண்மாயில் சுற்றி அமைக்கப்பட்ட வேலி சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும். இரண்டு கண்மாய் கரைகளின் கதவுகளை காலையில் குறிப்பிட்ட நேரம் திறந்து இரவில் பூட்ட வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த இரண்டு கண்மாய்களை மீட்ட நகராட்சியின் நடவடிக்கை பாராட்டுக் குரியது.