சென்னையில் ஆக.28ல் அரசு ஒப்பந்ததாரர்கள் மாநாடு முதல்வர் பங்கேற்கிறார்
தேனி:''கட்டுமான மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, சீரான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வர்த்தக மையத்தில் ஆக. 28 ல் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாநில மாநாடு நடக்க உளளது'' என, தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் திரிசங்கு தெரிவித்தார். தேனி மாவட்ட அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகள் மட்டும் இன்றி, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பகுதி அரசு ஒப்பந்தப் பணிகளில் கட்டுமான மூலப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பிரச்னை நீடித்து வருவதால் எங்கள் மாநில செயற்குழு முடிவின் படி, மாநிலம் முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை நிர்ணயம் செய்வதற்கான ஒழுங்குமுறை வாரியம் அமைக்கக்கோரியும்,நிதி பட்டுவாடா, ஒப்பந்த நியமனங்களில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாநில மாநாடு ஆக., 28 ல் நடத்த உள்ளோம். இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். எங்கள் கூட்டமைப்பின் திறன் வாய்ந்த 500 கட்டுமான பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் ஜெர்மன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். அக்குழுவின் சார்பில் தெற்காசியாவிலேயே அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியும் மாநாடு துவங்கும் நாளில் துவங்கி, ஆக., 29, 30 என 3 நாட்கள் நடக்க உள்ளன. மாநாட்டிற்கு அரசு ஒப்பந்ததாரர்கள் மட்டும் இன்றி இவர்களுக்கு கீழ் பணியாற்றும் கட்டுமானப் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்களும் அழைத்து வர மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.