முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
கூடலுார்: கூடலுார் அருகே முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார். கூடலுார் முனியாண்டி கோயில் தெரு கமருதீன் மகன் தல்கா ஆசீர் 20. திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் கூடலுார் வந்த இவர், நண்பர்களான கிருஷ்ணா, ஹரீஷ் ஆகியோருடன் நேற்று பகல் லோயர்கேம்ப் அருகே வண்ணான்துறையில் உள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றார். ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்திச் சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள், அருகில் இருந்தவர்கள் இணைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.