உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திண்டுக்கல் டூ குமுளி நான்கு வழிச்சாலையாக அமைகிறது! திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையம் அனுமதி

திண்டுக்கல் டூ குமுளி நான்கு வழிச்சாலையாக அமைகிறது! திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையம் அனுமதி

கம்பம்; திண்டுக்கல் முதல் குமுளி வரை 133 கி.மீ.தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விரிவாக்கத்தின் போது 9 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் சூழல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் முதல் கேரள மாநிலம் கொட்டாரக்கரா வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்தது. 2010 ம் ஆண்டிற்கு முன்பு ஆய்வு செய்த குழுவினர் அப்போது இருந்த வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு, நான்கு வழிச்சாலை தேவையில்லை என்று பரிந்துரைத்தனர். எனவே திண்டுக்கல் முதல் குமுளி வரை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு 2020 ல் பயன்பாட்டிற்கு வந்தது. பெரும்பாலான ஊர்களில் பைபாஸ் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக இருவழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்த பின் ஏற்பட்ட விபத்துகள், உயிரிழப்பு, காயம், வாகன எண்ணிக்கை போன்ற அம்சங்களை கருத்தில் கொண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆணைய அதிகாரிகள், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திற்கு வழங்கி உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.3 ஆயிரம் கோடியில் மதிப்பீடுகள் தயாரிக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஆணைய வட்டாரங்களில் விசாரித்த போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடத்திய சர்வேயில் தினமும் 23 ஆயிரம் வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தன . தற்போது அதன் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. விபத்துகளின் எண்ணிக்கை, உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வைத்து, நான்குவழி சாலையாக மாற்ற உள்ளோம். இந்த நெடுஞ்சாலையில் 26 சந்திப்புக்கள் மற்றும் 16 பைபாஸ் ரோடுகள் துவங்கும் மற்றும் முடியும் இடங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. அத்துடன் நெடுஞ்சாலையை சந்திக்கும் 380 கிராம ரோடுகள் மேம்படுத்தப்படும். புதிதாக இரண்டு டோல்கேட்டுகள் அமைக்கப்படும். மேலும் இந்த விரிவாக்க பணிகளின் போது 9 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளது. இது தொடர்பாக சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்து ஆணைய அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி