கம்பம் நகராட்சி துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
கம்பம்: கம்பத்தில் சூர்யா சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை நடத்திய தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி துணை தலைவர் சுனோதா, அவரது கணவர் மாஜி தி.மு.க., நகர் செயலாளர் செல்வக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி தலைவர், கமிஷனரிடம் அந்த கடையின் முதலீட்டார்கள் புகார் மனு அளித்தனர்.கம்பம் காந்திஜி வீதியில் 2021 ல்சூர்யா சில்க்ஸ், ரெடிமேட்ஸ் கடை ஆரம்பித்தனர். இக் கடை நிர்வாகிகளாக மாஜி கம்பம் தி.மு.க. நகர் செயலாளர் செல்வக்குமார், இவரின் மனைவியும், தற்போதைய நகராட்சி துணை தலைவருமான சுனோதா இருந்தனர்.கம்பத்தை சேர்ந்த தினகரன் என்பவரது தலைமையில் நேற்று 20 பேர் நகராட்சி அலுவலகம் வந்து தலைவர் வனிதா, கமிஷனர் பார்க்கவியிடம் மனு அளித்தனர். பின் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது :ஜவுளி கடை ஆரம்பிக்க தலா ரூ. 6 லட்சம் வீதம் செல்வக்குமார் மற்றும் சுனோதாவிடம் பணம் கொடுத்தோம்.அந்த பணத்திற்கு டிவிடெண்ட் தரவில்லை. ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்த போது ஏமாற்றப்பட்டது தெரிந்தது. பணத்தை திருப்பி தர மறுக்கின்றனர். கம்பம் தெற்கு போலீசில் புகார் செய்துள்ளோம். முதல்வரின் தனிப் பிரிவிற்கும் மனு அனுப்பி உள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.சுனோதா நகராட்சியில் துணை தலைவராக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி தலைவரிடமும், கமிஷனரிடமும் மனு கொடுத்துள்ளோம் என்றனர்.