மூணாறு: கேரளாவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான காங்., தமிழகத்தில் கூட்டணியில் உள்ள தி.மு.க., வி.சி.க.,வை விட்டு தனித்து களம் காண்கின்றது. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிச.9, 11ல் நடக்கிறது. இண்டி கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் கேரளாவில் எதிரும், புதிருமாக உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி ஜனநாயக கூட்டணியும் எதிரெதிராக தேர்தலை சந்திப்பது வழக்கம். இந்த கூட்டணிகளுக்கு தமிழக கட்சிகளான தி.மு.க., விடுதலை சிறுத்தை ஆகியவை ஆதரவு அளிக்கும். அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடும். இந்நிலையில் தற்போது நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.,உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. குறிப்பாக இடுக்கி மாவட்டம் முழுதும் பா.ஜ., போட்டியிடுகிறது. அதேபோல் மாவட்டத்தில் மறையூர், மூணாறு, தேவிகுளம், சின்னக்கானல் ஆகிய ஊராட்சிகளில் தலா 2 வீதம், வட்டவடை, குமுளி, பீர்மேடு ஆகிய ஊராட்சிகளில் தலா 1 வீதம், தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 3, மாவட்ட ஊராட்சியில் 2 என, 16 வார்டுகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. கழற்றி விட்ட காங்கிரஸ் கடந்த தேர்தல்களில் தி.மு.க., வி.சி.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை அந்த கட்சிகளை கழற்றி விட்டதால், இம்மாவட்டத்தில் உப்புதரா ஊராட்சியில் 9, சின்னக்கானல் ஊராட்சியில் 3, தேவிகுளம், மறையூர் ஆகிய ஊராட்சிகளில் தலா 1வீதம், தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 என, 15 வார்டுகளில் தி.மு.க., போட்டியிடுகிறது. பீர்மேடு ஊராட்சி ஒன்றியத்தில் 1, உப்புதரா ஊராட்சியில் 6, பீர்மேடு, குமுளி, ஏலப்பாறை, சாந்தாம்பாறை ஆகிய ஊராட்சிகளில் தலா 1என, 11 வார்டுகளில் வி.சி.க., போட்டியிடுகிறது.