பணி முடிந்தும் தாமதமாகும் பில் தொகையால் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
தேனி: ஊரக பகுதிகள், நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான பில் தொகை வழங்க காலதாமதம் ஆவதால் ஒப்பந்ததாரர்கள் அவதிப்படுவது தொடர்கிறது.மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் எம்.எல்.ஏ., நிதி, எம்.பி., நிதி, மற்றும் அரசு திட்டங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. உதாரணமாக கிராமப் பகுதிகளில் புதிய ரோடு அமைத்தல், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், ரோடு புதுப்பித்தல், ரேஷன்கடை கட்டடம், சுகாதார வளாகங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் நடக்கும் போதும், பணிகள் நிறைவடைந்த பின்பும் ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த ஒன்றிய, மாவட்ட அளவிலான பொறியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். பின்னர் ஒப்பந்தத் தொகை முழுவதும் ஒப்பந்தத்தாரர்களுக்கு விடுவிக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த பணிகளுக்கும், பில் தொகை வழங்கப்படாமல் உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பில் தொகை தாமதமாக வந்தது. சில நாட்களுக்கு முன் அனைத்து பணிகளுக்குமான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.', என்றனர்.