மதகு, வாய்க்கால் கரைகள் சேதம்: விவசாயிகள் தவிப்பு
கம்பம்: மழை வெள்ளத்தால் கம்பம் பள்ளத்தாக்கு கடும் பாதிப்பிற்குள்ளானது. கம்பம் உத்தமுத்து வாய்க்கால் தலை மதகு சேதமடைந்ததால் ஆற்று தண்ணீர் வாய்க்கால் வழியாக , வயல்களுக்குள் தொடர்ந்து பாய்ந்து வருகிறது. இதனால் அறுவடைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சின்ன வாய்க்காலில் கருப்பசாமி கோயில் அருகில் ஏற்பட்ட உடைப்பை நீர்வளத் துறையினர் சரி செய்தனர். ஆனால் வாய்க்கால் கரையில் ஆங்காங்கே ஏற்பட்ட சிறு சிறு உடைப்புகளை சரி செய்யவில்லை. இதனால் அறுவடை செய்த நெல் மூடைகளை டிராக்டர் மூலம் ஊருக்குள் கொண்டு வர முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மழை குறைந்தும் துயரம் குறையவில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். நீர்வளத் துறையினர் சின்னவாய்க்கால் கரை உடைப்புகளை முழுமையாக சீரமைக்க வேண்டும். உத்தமுத்து வாய்க்கால் தலை மதகை உடனே செப்பனிட்டு, வாய்க்காலுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.