நகராட்சியில் வீடு கட்ட அனுமதி பெற்று கடைகள் கட்டும் உரிமையாளர்கள் அனுமதி பெற்றவர்களுடன் ஆலோசிக்க முடிவு
தேனி: தேனி நகராட்சி பகுதியில் சுய சான்று முறையில் கட்டட அனுமதி பெற்றவர்கள், அங்கிகாரம் பெற்ற பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்த நகராட்சி நகரமைப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகள் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் சுயசான்று அளித்து கட்டுமான அனுமதி பெறும் முறை அமலுக்கு வந்தது. இந்த முறை எளிதாக உள்ளதால் பலரும் பயனடைகின்றனர். ஆனால், சிலர் வீட்டு கட்ட அனுமதி பெற்று வர்த்தக பயன்பாட்டிற்கான கடைகள், கோடவுன் அமைக்கின்றனர். ஆய்விற்கு செல்லும் போது அங்கு வேறு பயன்பாட்டிற்கு கட்டடங்கள் கட்டுவது தெரியவருகிறது. இது தவிர சிலர் அனுமதி பெறும் போது விண்ணப்பித்த வரைபடங்களில் உள்ள அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு கட்டுமானங்கள் மேற்கொள்கின்றனர். இப்பிரச்னை தொடர்பாக இதுவரை சுய சான்றழித்தல் முறையில் அனுமதி பெற்ற 52 கட்டட உரிமையாளர்கள், அங்கீகாரம் பெற்ற பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.