டிஜிட்டல் கிராப் சர்வே பணி மீண்டும் வி.ஏ.ஓ.,க்கள் வசம் ஒப்படைக்க முடிவு
கம்பம்; டிஜிட்டல் கிராப் சர்வே பணியை மீண்டும் வி.ஏ.ஓ.,க்கள் வசம் ஒப்படைக்க அரவு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசிக்க வி.ஏ.ஓ., சங்க நிர்வாகிகளுடன் நாளை(அக்.,15) மாநில வருவாய் நிர்வாக ஆணையர் பேச்சுவார்த்தை நடந்த உள்ளார். வருவாய்த்துறை ஆவணங்களில் சிட்டா என்பது ஒரு நிலம் யார் பெயரில் உள்ளது என்பதை காட்டும். அடங்கல் என்பது அந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும். இதில் அடங்கல் ஆவணத்தை டிஜிட்டல் மயமாக்க மாநில வருவாய் நிர்வாக ஆணையர் 2003 ல் உத்தரவிட்டார். வி.ஏ.ஓ.,க்கள் இப் பணிமேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு கொள்கை முடிவு என்பதால் வேறு வழியின்றி வி.ஏ.ஓ. க்கள் பணிகளை துவங்கினர். பின்னர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஒரு வி. ஏ. ஓ. விற்கு குறைந்தது 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் சர்வே எண்கள் உள்ளது. அந்த நிலத்தில் நின்று 16 வகையான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். சர்வர் பழுது, இணைய சேவை கிடைக்காதது என பல பிரச்னைகள் உள்ளன. எனவே 500 எக்டேருக்கு ஒரு பணியாளர் நியமிக்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஊக்கத் தொகையாக ரூ.10 வழங்க வேண்டும் என்று வி.ஏ.ஓ.,க்கள் வலியுறுத்தினர். அரசு அதை ஏற்காமல் இப் பணிகளை வேளாண், தோட்டக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மூலம் மேற்கொண்டனர். கடந்தாண்டு இப் பணியை அவுட்சோர்சிங் முறையில் மேற்கொள்ள அரசு அனுமதித்தது. ஒரு சர்வே எண்ணிற்கு ரூ.20 வீதம் வழங்க அரசு உத்தரவிட்டது. இதிலும் சிக்கல் எழுந்து மீண்டும் வேளாண் துறை வசம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஆண்டிற்கு 3 முறை மேற்கொள்ள வேண்டிய இப் பணிமேற்கொள்வதில் தொடர்ந்து சிக்கல்,தேக்க நிலையும் இருந்து வருகிறது. ஒரு பதிவிற்கு ரூ.10 வீதம் வழங்கி இப் பணிகளை மீண்டும் வி. ஏ.ஓ.,க்களிடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை (அக். 15 ) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு வி. ஏ.ஓ.. க்கள் சங்க மாநில நிர்வாகிகளை மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அழைத்துள்ளார். சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பேச்சுவார்த்தைக்கு மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அழைத்துள்ளார். கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது தெரியவில்லை,' என்றனர்.