தானியங்கி மழை மானிகள் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்: மழை அளவை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல்
மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை கணக்கிட தானியங்கி வானிலை, மழை மானிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாவட்டத்தில் பதிவாகும் மழை கணக்கிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் பெய்த மழை அளவுடன் ஒப்பிடவும், அடுத்த ஆண்டுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்யவும் பயன்படுகின்றன.மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டிபட்டி, அரண்மனைப்புதுார், வீரபாண்டி, பெரியகுளம், மஞ்சளாறு, சோத்துப்பாறை, வைகை அணை, போடி, உத்தமபாளையம், கூடலுார், பெரியார் அணை, தேக்கடி ஆகிய 12 இடங்களில் மழை மானிகள் பொருத்தப்பட்டு மழை அளவு பதிவு செய்யப்பட்டு வந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் சண்முகா நதி அணை பகுதியில் ஒரு மழைமானி பொருத்தி மழையளவு பதிவு செய்யப்படுகிறது.மழை மானிகள் பொருத்தப்படாத பகுதிகளில் பெய்யும் மழையளவை பதிவு செய்வதில் பல ஆண்டுகளாக சிக்கல் நிலவியது. குறிப்பிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தாலும், அந்த பகுதிகளில் மழை மானிகள் இல்லாததால் அவை கணக்கில் வராமல் இருந்தன. இதனால் கடந்தாண்டு மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனியில் 2, பெரியகுளத்தில் 4, ஆண்டிப்பட்டியில் 6, போடியில் 5, உத்தமபாளையத்தில் 9 என 26 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டன. இதனுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு தானியங்கி வானிலை மானியும் அமைக்கப்பட்டது. இந்த தானியங்கி கருவிகள் 2024 வடகிழக்கு பருமழை காலத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்ததது.ஆனால் கருவிகள் பொருத்தப்பட்டு ஓராண்டுகள் ஆகிறது. இதுவரை மழைமானி கருவிகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. இங்கு பதிவாகும் மழை அளவுகள் பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.