மணல் கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
போடி : போடி பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஏலம் விடாமல் துருப்பிடித்து வீணாகி வருகிறது.போடி கொட்டகுடி ஆறு, அணைப் பிள்ளையார் அணை பகுதியில் 6 ஆண்டுகளுக்கு முன் இரவு, பகல் மணல் கடத்தல் நடந்தது. இதனால் அணைப் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு இடியும் நிலை ஏற்பட்டது. இதனை ஒட்டி அணைப் பிள்ளையார் அணைப்பகுதியில் மணல் அள்ள மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் மாட்டுவண்டி, டிராக்டர்களின் மணல் கடத்தல் நிறுத்தப்பட்டது.இதற்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் மணல் அள்ளி நம்பர் இல்லாத டூவீலர்களில் கடத்தினர். மணல் கடத்தல் கும்பல் அதிகாரிகள் வருவதை அறிந்தால் எஸ்கேப் ஆவதற்கு டூவீலரை பயன் படுத்தினர். பலர் வாகனங்களை போட்டு விட்டு தப்பினர். இதுபோன்ற செயல்களால் மணல் கடத்திய 50 க்கும் மேற்பட்ட டூவீலர்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாகத்தில் வைத்து உள்ளனர். டூவீலர்கள் பறிமுதல் செய்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் உரியவர்களிடம் அபராதம் வசூலித்து ஒப்படைக்காமலும், ஏலம் விடாமல் இருப்பதாலும் பயன்பாடு இன்றி துருப்பிடித்து வீணாகிறது. அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்களை ஏலம் விட வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.