மேலும் செய்திகள்
விவசாய பணிக்கு நெல் அறுவடை இயந்திரம்
09-Sep-2024
கம்பம் : நெல் அறுவடைக்கு பயன்படும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு வழங்க வேளாண் பொறியியல் துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது முதல் போக நெல் சாகுபடியில் இரு மாதங்களில் அறுவடை துவங்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்து வந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக நெல் அறுவடைக்கு இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இயந்திரங்கள் மூலம் அறுவடை எளிதாகிறது. மழை பெய்தாலும் அறுவடை செய்ய முடியும். குறுகிய நேரத்தில் அறுவடை முடிந்து விடும். அறுவடை இயந்திரங்கள் டெல்டா மாவட்டங்களிலிருந்து வந்தன. எனவே தற்போது விவசாயிகள் இயந்திர அறுவடையை மட்டுமே மேற்கொள்கின்றனர்.கடந்தாண்டு ஒரு மணி நேரத்திற்கு அறுவடைக்கு கட்டணமாக ரூ.2800 வசூலிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 60 முதல் 70 சென்ட் நிலத்தில் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. மழை, காற்று காரணமாக கதிர்கள் தரையில் சாய்ந்திருந்தால், அறுவடை கட்டணம் இரு மடங்காகும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 வசூலிக்கப்பட்டது.விவசாயிகள் கூறுகையில், இயந்திர அறுவடை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே வரும் முதல் போக சீசனில் அறுவடைக்கு இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடைக்கு இன்னமும் 2 மாதங்கள் இருப்பதால், நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசம் உள்ளது. எனவே, வேளாண் பொறியியல் துறை தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என்றனர்.
09-Sep-2024