காளாத்தீஸ்வரர் ஞானம்பிகை கோயில் தெப்பம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகளை உடனே துவக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். புராதனமான இக் கோயில் தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது. இக் கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது. ராகு கேது தம்பதி சகிதமாக தனித் தனிக் கோயில்களில் எழுந்தருளியுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை இங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்கின்றனர். இக் கோயில் திருப்பணி முடித்து கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடைபெறும் போது, தெப்பத்தை தயார் செய்திட வேண்டும் என்று பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ தெப்ப பராமரிப்பு பணிகள் அரைகுறையாகவே விடப்பட்டுள்ளது.தெப்பத்தை புதுப்பிக்க அரசு சார்பில் ரூ.21 லட்சம் வழங்கியது. அந்த நிதி பற்றாக்குறை என்ற நிலையில், உபயதாரர்களும் பணி செய்துள்ளனர். இருந்த போதும், குளம் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெறவில்லை. பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெப்பம் புதுப்பிக்கும் பணி முழுமை அடையவில்லை. தெப்பத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்றும் பக்தர்கள் ஹிந்து அறநிலைய துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் தலையிட்டு தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.