| ADDED : ஜூன் 24, 2024 02:06 AM
தேவதானப்பட்டி : ஜூனில் மஞ்சளாறு அணை 55 அடியை எட்டியதால் அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் இரு கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. நேற்று நீர் வரத்து குறைந்ததால் ஒரு கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் அணைப் பகுதியை பார்வையிட்டு சென்றனர்.தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. முருகமலை, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு, பெருமாள் மலை பகுதிகளிலும், மஞ்சளாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. பாதுகாப்பு கருதி 55 அடி மட்டுமே நீர்த்தேக்க முடியும். ஜூன் 20ல் அணை நீர்மட்டம் 55 அடியை எட்டியது. அப்போது அணைக்கு வினாடிக்கு 94 கன அடி நீர் வரத்தினால் இரு கண் மதகு வழியாக 94 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று வினாடிக்கு 46 கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இதனால் ஒரு கண் மதகு வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.மஞ்சளாறு அணை வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலங்களில் நிரம்பும். அணை திறந்து முதன் முதலாக ஜூனில் நிரம்பியுள்ளது. அணை நீரினால் மஞ்சளாறு, தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி உட்பட தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, தும்மலப்பட்டி, குன்னுவாரன் கோட்டை பகுதிகளில் 2111 ஏக்கர் என மொத்தம் 5,259 ஏக்கர் பாசன வசதி பெறும். நேற்று அணைப் பகுதியை திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பார்வையிட்டு சென்றனர்.