உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் பதவி உயர்வு வழங்குவதில்...  பாகுபாடு; உதவி வேளாண், தோட்டக் கலை அலுவலர்கள் குமுறல்

மாவட்டத்தில் பதவி உயர்வு வழங்குவதில்...  பாகுபாடு; உதவி வேளாண், தோட்டக் கலை அலுவலர்கள் குமுறல்

அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வு என்பது சம்பள உயர்வு, அதிகார உயர்வு, வாகன வசதி உள்ளிட்ட பல சலுகைகளை உள்ளடக்கியதாகும். வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர், இயக்குநர் என்ற வரிசையில் பதவி உயர்வுகள் கிடைக்கின்றன. தோட்டக்கலைத் துறையிலும் இதே நடைமுறைதான். இந்த 2 துறைகளிலும் பட்டப்படிப்பு படித்தவர்கள் நேரடியாக வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் (தற்போது தோட்டக்கலைத் துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களும் நேரடியாக நியமனம்) என, நியமன நடைமுறை உள்ளது. குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகளில் உதவி இயக்குநர் பதவி உயர்வு, கிடைத்து விடுகிறது. ஆனால், டிப்ளமோ படித்து, உதவி வேளாண், தோட்டக் கலை அலுவலர்களாக பணியாற்றுபவர்கள் இரண்டே 2 பதவி உயர்வுகள் மட்டுமே பெறுகின்றனர். 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும் பதவி உயர்வு மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது. தோட்டக் கலைத்துறையில் அது கூட இல்லை. உதவி தோட்டக் கலை அலுவலர், துணை தோட்டக் கலை அலுவலர் என்ற ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. டிப்ளமோ படித்து பணியில் சேர்ந்து பதவி உயர்வு இன்றி உள்ளவர்கள் புலம்புகின்றனர். 2008ல் சேர்ந்தவர்களுக்கு இன்னமும் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிலர் கூறியதாவது: தேனியில் மட்டும் இன்றி பிற மாவட்டங்களிலும் இப்பிரச்னை உள்ளது. பதவி உயர்வு குறித்துத் துறை செயலர் மட்டத்தில் ஆலோசனை செய்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும். பிற துறைகளில் பல பதவி உயர்வுகள் தரப்படுகின்றன. டிப்ளமோ படித்து பணியில் சேருபவர்கள் நிலைமை இன்னமும் பரிதாபம். டிப்ளமோ படித்தவர்கள் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், துறை ரீதியாக - தேர்வு நடத்தி இன்னும் ஒரு பதவி உயர்வு தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப்படிப்பு படித்து பணியில் சேருபவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவில் பதவி உயர்வு வழங்க வேண்டும்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை