UPDATED : ஆக 11, 2025 05:08 AM | ADDED : ஆக 11, 2025 04:09 AM
அடங்கல் ஆவணத்தை டிஜிட்டல் மயமாக்க மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த 2003ல் உத்தரவிட்டார். முதலில் வேளாண் துறை இப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் மறுத்துவிட, வி.ஏ.ஒ.,க்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. முதலில், 'இப்பணிகளை செய்ய மாட்டோம்' என, வி.ஏ.ஒ.,க்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினர். பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் வலியுறுத்தியதால், பணிகளை துவக்கினர். ஆனாலும் நிறைய சிரமங்களை சந்தித்தனர். பின் மறுப்பு தெரிவித்து பல கட்டப் போராட்டங்களையும் நடத்தினர். ஒரு வி.ஏ.ஓ.,விற்கு குறைந்தது 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் சர்வே எண்கள் உள்ளது. ஒவ்வொரு சர்வே எண் கொண்ட நிலத்திற்கும் நேரில் சென்று, நிலத்தில் 20 மீட்டர் துாரத்தில் நின்று புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அது சிரமமானது. அதை 5 மீட்டர் துாரமாக குறைக்க வேண்டும். அதே நிலத்தில் நின்று 16 வகையான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். 'சர்வர் பழுது, இணைய சேவை கிடைக்காதது' என்பன உட்பட பல பிரச்னைகள் உள்ளது. எனவே 500 எக்டேருக்கு ஒரு பணியாளர் நியமிக்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஊக்கத் தொகையாக ரூ.10 வழங்க வேண்டும் என, வி.ஏ.ஓ.,க்கள் வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் வேளாண், தோட்டக் கலைக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களை வைத்து, பணிகளை துவக்கினர். மேலும் இப்பணிகளை ஒருங்கிணைக்க வேளாண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்களை வைத்து பணிகள் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஒரு சர்வே நம்பருக்கு ரூ.20 கட்டணமாக வழங்கி 'அவுட்சோர்சிங்' முறையில் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதித்தது. இந்நிலையில் ஆண்டிற்கு 3 முறை மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு, ஒரு பதிவிற்கு ரூ.10 மட்மே தர நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், அரசு தர மறுத்தது. இப்போது ஒரு பதிவிற்கு ரூ.20 தனியாருக்கு ஏஜன்சிக்கு தரப்படும் என, உத்தரவாதம் அளித்துள்ளது எந்த வகையில் நியாயம் என, வி.ஏ.ஓ.,க்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.