உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாரம் ஒரு நாள் குடிநீர் சப்ளையால் உவர்ப்பு நீரை பருகும் அவலம் ராசிங்காபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி சிரமம்

வாரம் ஒரு நாள் குடிநீர் சப்ளையால் உவர்ப்பு நீரை பருகும் அவலம் ராசிங்காபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி சிரமம்

போடி: போடி ஒன்றியம், ராசிங்காபுரம் ஊராட்சியில் வாரம் ஒரு நாள் குடிநீர் வினியோகிப்பதால் போர்வெல்லில் வரும் உவர்ப்பு நீரையே குடிநீராக பருகு கின்றனர். இங்கு ரோடு, சாக்கடை வசதி இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ராசிங்காபுரம் ஊராட்சி 2வது வார்டு கீழப்பட்டி, மந்தையம்மன், வீருசின்னம்மாள், மாரியம்மன் கோயில் தெரு, குரும்பர் சாவடி தெரு, ஊராட்சி ஒன்றிய பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகள் அமைந்து உள்ளன. இப்பகுதிக்கு உப்புக் கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வாரம் ஒரு நாள் குடிநீர் சப்ளையாகிறது. இதனால் நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க போர்வெல் நீரையே குடிநீராக பருகும் நிலையில் உள்ளனர். தெருக்களில் சாக்கடை தூர்வாராததால் கழிவு நீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது. மயானத்தில் போர்வெல் வசதி இல்லாததால் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு அருகே உள்ள தோட்டங்களில் இருந்து தண்ணீர் சுமந்து மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஊராட்சியின் நிலவும் பிரச்சனைகள் குறித்து மக்கள் கூறியதாவது: குடிநீர் தட்டுப்பாடு ரவி, ராசிங்காபுரம்: வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் சப்ளையாகிறது. சப்ளை இல்லாத நாட்களில் அருகே உள்ள தெருக்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகிறோம். சில நாட்கள் போர்வெல் நீரை குடிநீராக பருகும் நிலை உள்ளது. மந்தையம்மன் கோயில் தெரு, குரும்பர் சாவடி தெருவில் அமைக்கப்பட்ட போர்வெல் தண்ணீர் தொட்டிகள் சில மாதங்கள் மட்டுமே செயல் பட்டது. மின்மோட்டார் பழுதால் பல ஆண்டுகளாக பயன்இன்றி உள்ளன. மந்தையம்மன் கோயில் தெரு சாக்கடை சிறுபாலம் அருகே பேவர் பிளாக் ரோடு சேதம் அடைந்து இரண்டு ஆண்டுகளாகியும் சீரமைக்கவில்லை. இரவில் பள்ளம் தெரியாத நிலையில் டூவீ லரில் வரும் போது கீழே விழுந்து செல்கின்றனர். மயானத்தில் தண்ணீர் வசதி இல்லை தங்கமாயன், ராசிங்காபுரம்: ராசிங்காபுரம் போடி மெயின் ரோட்டில் பொது மயானம் உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. போர்வெல் குழாய் இல்லாததால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய தண்ணீருக்காக அருகே உள்ள தோட்ட பகுதிக்கு சென்று தண்ணீர் கொண்டு வர சிரமம் ஏற்படுகிறது. தெருக்களில் சாக்கடை தூர்வாராததால் கழிவு நீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகம் உள்ளது.சாக்கடை சுத்தம் செய்யவேண்டும். மயானத்தை சுகாதாரமாக மாற்றிடவும் போர்வெல் தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும். குப்பை அகற்ற வேண்டும் ராஜேந்திரன், ராசிங்காபுரம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம் செல்லும் ரோட்டை ஆக்கிரமித்து குப்பை கொட்டுகின்றனர். தேங்கிய குப்பை அகற்றாமல் அடிக்கடி தீ வைத்து வருகின்றனர். இதிலிருந்து வெளியேறும் புகையால் பள்ளி செல்லும் மாணவர்கள், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு செல்லும் பொது மக்களுக்கு சுவாச பிரச்னையால் சிரமம் அடைகின்றனர். இப்பகுதியில் போர்வெல் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டும் பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, ரோட்டில் குப்பை கொட்டுவது தவிர்க்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி