உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்டமனூரில் குடிநீர் பிரச்னை; பொது மக்கள் உண்ணாவிரதம்

கண்டமனூரில் குடிநீர் பிரச்னை; பொது மக்கள் உண்ணாவிரதம்

ஆண்டிபட்டி : கண்டமனுாரில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், குடிநீர் வாரிய அதிகாரிகளை கண்டித்து பொது மக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.கண்டமனுார் 12வது வார்டில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இப்பகுதிக்கு கண்டமனூர் கூட்டுக் குடிநீர் திட்டம், வீரபாண்டி சத்திரப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் ஆகிறது. கூடுதல் தேவைக்கு போர்வெல் நீரும் உள்ளது. தினமும் 7 லட்சம் லிட்டர் வரை குடிநீர் கிடைக்க வேண்டிய பகுதிக்கு தேவையான அளவு குடிநீர் விநியோகம் இல்லை. ஏற்கனவே 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து பொது மக்கள் ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்தும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனை கண்டித்து நேற்று கண்டமனுாரில் ஜல்லிக்கட்டு தெரு முத்தாலம்மன் கோயில் அருகே பொது மக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். ஆண்டிபட்டி தாசில்தார் காதர் ஷெரீப், குடிநீர் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிக்குமார், ராஜதானி இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின் இரு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ