உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளி மலைப்பாதையில் டிரைவர்கள் அச்சம்! மண், ரோடு விரிசலால் விபத்து அபாயம்

குமுளி மலைப்பாதையில் டிரைவர்கள் அச்சம்! மண், ரோடு விரிசலால் விபத்து அபாயம்

கூடலுார்: குமுளி மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் ரோடு விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளும் முழுமை அடையாததால் தினந்தோறும் நெரிசல் சிக்கி ஐயப்ப பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சபரிமலையில் மண்டல பூஜை உற்ஸவ விழாவிற்காக நவ.16 மாலை நடை திறக்கப்பட்டது. துவக்கத்திலேயே ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகம் வர துவங்கியுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சபரிமலைக்கு செல்கின்றன. தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக குமுளி மலைப்பாதை உள்ளது. வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள குமுளி மலைப் பாதையில் 2018ல் பெய்த கன மழையால் கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இடையே போக்குவரத்து தடை ஏற்பட்டது. அப்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்த பின் மண் சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து கற்களால் தடுப்புச் சுவர், தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக இப்பணிகள் நடைபெறாததால் கொண்டை ஊசி வளைவு, இரைச்சல் பாலம் வளைவு, மாதா கோயில் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. மேலும் பழைய போலீஸ் சோதனைச் சாவடி அருகே மரங்கள் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சபரிமலை சீசன் துவங்குவதற்கு முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ரோடு விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை துவக்கி மெத்தனமாக நடந்து வருகிறது. இந்த இடத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்லக் கூடிய வகையில் இருப்பதால் கூடுதலாக வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மண் சரிவு ஏற்படும் அபாயம் பல இடங்களில் உள்ளதால் வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்