| ADDED : பிப் 20, 2024 06:12 AM
தேனி : தேனியில் மாற்றுப்பாதை திட்டத்தை செயல்படுத்த இயலாததால் மேம்பாலப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணி நடைபெறும் பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக அதிக துாசி பறப்பதாலும், இரவில் வெளிச்சம் இல்லாததால் விபத்து அபாயமும் அதிகரித்து வருகிறது.தேனி மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.90.02 கோடியில் 1.26 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ரயில்வே கேட்டிற்கு அருகே அரண்மனைப்புதார் விலக்கு பகுதியில் துாண்கள் அமைக்கும் பணி கடந்த மாதம் முடிவடைந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலில், நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். வாகனங்கள் புது பஸ் ஸ்டாண்ட் செல்ல அல்லிநகரம், அன்னஞ்சி விலக்கு சென்று வர அறிவுறுத்தினர். அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்டி பகுதியில் இருந்து தேனி வர வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வழியாக வர அறிவுறுத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றம் பிப்., 9 முதல் செயல்பாட்டிற்கு வரும் என போலீசார் அறிவிப்பு செய்தனர்.ஆனால் மேம்பாலத்தில் கான்கிரீட் பிளாக்கள் பொருத்தம் பணி பிப்.,12 மதியம் துவங்கியது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றினர். ஆனால் வாகன ஓட்டிகள் புது பஸ் ஸ்டாண்டிற்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வேண்டும் என கருதி என்.ஆர்.டி., நகர், பாரஸ்ட்ரோடு, சிவாஜி நகர் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் செல்ல முற்பட்டனர். இதனால் தேனி நகர்பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதைத்தொடர்ந்து பாலத்தில் கான்கிரீட் பிளாக்கள் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து அரண்மனைப்புதுார் விலக்கு வழியாக திருப்பப்பட்டது. இதனால் மேம்பால பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பணி நடைபெறும் பகுதியில் இரவில் போதிய வெளிச்சம் இல்லை, பகலில் கண்ணை மறைக்கும் துாசியால் விபத்து அபாயமும் உள்ளது.போக்குவரத்து மாற்றம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடந்தது. அதில் திட்ட சாலைகளை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்ட வரவேண்டும், அதன்பின் போக்குவரத்து மாற்றம் செய்யலாம் என அதிகாரிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள ரோட்டினை பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரோடு அருகே உள்ள விடுதியில் குறிப்பிட்ட பகுதியை ரோட்டிற்காக எடுக்கும் பணிகளும் நடந்து வருகிறது.