கூடலுார் நகராட்சியில் பூங்கா வசதியின்றி முதியோர் தவிப்பு ; தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபயிற்சி செய்யும் நிலை
கூடலுார்: கூடலுார் நகராட்சியில் பூங்கா அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் ஓய்வு எடுக்க இடமின்றி முதியோர்கள் தவித்து வருகின்றனர்.கூடலுார் நகராட்சி அலுவலகத்திற்கு மேற்குப் பகுதியில் பூங்கா 25 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தது. அப்பகுதியில் கிளை நூலகமும் இயங்கி வந்தது. இதனை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டது. மீதமுள்ள இடத்தில் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தன. ஆனால் அப்பகுதியில் நகராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டதால் பூங்கா அமைத்ததற்கான நிதி வீணாகியது. எஞ்சிய இடத்தையும் விட்டு வைக்காமல் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டது. தற்போது பூங்காவில் இருந்த காந்தி சிலை மட்டுமே உள்ளது. நகராட்சியில் பூங்கா இல்லாததால் வயதானவர்கள் ஓய்வு எடுக்க இட வசதியின்றி சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.பெத்துக் குளத்தில் இருந்த குப்பை கிடங்கை அகற்றி அங்கு பூங்கா அமைப்பதாக நகராட்சி அறிவித்திருந்தது. அத்திட்டமும் கைவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் காந்தி கிராமத்தில் உள்ள ராஜாக் கிணற்றுக்கு அருகில் பூங்கா அமைக்க நகராட்சி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்க இருந்தன. ஆனால் அந்த இடம் வருவாய்த் துறையினரிடம் இருந்து நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால் அத்திட்டம் கைவிடப்பட்டது.தற்போது நகராட்சியில் பூங்கா வசதி இல்லாததால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் ஆபத்தான நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், ரோடுகளிலும் சென்று வருகின்றனர்.நகராட்சிக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்து விரைவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.