உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பாதி எரியூட்டப்பட்ட நிலையில் வீசி எறியப்பட்ட மூதாட்டி உடல்; உறவினர்கள் போலீசில் புகார்

 பாதி எரியூட்டப்பட்ட நிலையில் வீசி எறியப்பட்ட மூதாட்டி உடல்; உறவினர்கள் போலீசில் புகார்

சின்னமனுார்: தேனி மாவட்டம் சின்னமனுார் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடையில் பாதி எரியூட்டப்பட்ட நிலையில் மூதாட்டி உடலை வீசி எறிந்த ஊழியர்கள், மூதாட்டியின் உறவினர்களை கண்டு தப்பி சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நகராட்சிக்குட்பட்ட ராமசாமி தெரு மூதாட்டி சீனியம்மாள் 98, நேற்று முன்தினம் காலை, வயது மூப்பால் இறந்தார். அன்று மாலை 6:00 மணிக்கு குடும்பத்தினர் இறுதி சடங்குகளை முடிந்து நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடையில் எரியூட்டுவதற்காக உரிய கட்டணத்தை செலுத்தினர். உடலை வழங்கிவிட்டு, வீட்டிற்குச் சென்று விட்டனர். அதையடுத்து மூதாட்டி உடலை, மயான ஊழியர்கள் எரியூட்ட துவங்கினர். உடல் பாதி எரிந்து கொண்டிருந்த 10 நிமிடங்களில் மற்றொரு உடல் எரியூட்ட அங்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் பாதி எரியூட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் உடலை எடுத்து அருகில் உள்ள இடத்தில் வீசினர். பின் புதிதாக வந்த உடலை எரியூட்ட துவங்கினர். இத்தகவல் சீனியம்மாள் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தெரிந்தது. ஆத்திரமடைந்த அவர்கள், எரிவாயு தகன மேடைக்கு ஆவேசமாக சென்றனர். அவர்களை கண்டதும் மயான ஊழியர்கள் தப்பி ஓடினர். பின் மூதாட்டியின் பேரன் பாலமுருகன் சின்னமனுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். எரிவாயு தகன மேடை ஒப்பந்தம் விடப்பட்டதும், பழுதாகி இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு கூடலூர் எரிவாயு தகன மேடை ஊழியர்களை வரவழைத்து தகன மேடையில் இருந்த 2 பேரில் உடல்களையும் எரியூட்ட நடவடிக்கை எடுத்தனர். நகராட்சி தலைவர் அய்யம்மாள் கூறியதாவது: ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள தகன மேடை பழுதடைந்து, சீரமைக்கும் பணி நடக்கிறது. அதனை டிச.,31 வரை மூட உத்தரவிட்டுள்ளேன். தற்காலிகமாக நத்தத்துமேடு சுடுகாட்டை பயன்படுத்திக் கொள்ளவும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை