மின்வாரிய குடியிருப்புகள் பயன்பாடு இன்றி சேதம்
போடி, : போடி அருகே அணைக்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் ரூ. பல லட்சம் செலவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் பயன்பாடு இன்றி சேதம் அடைந்து உள்ளன.போடி அருகே அணைக்கரைப்பட்டியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு துணை மின் நிலையம் அமைக்கப்பட்டன. இங்கு பணிபுரியும் உதவி மின் பொறியாளர், பணியாளர்களுக்காக ரூ.பல லட்சம் மதிப்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. எதிர் பாராமல் ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்திடவும், பாதுகாப்பு கருதி குடியிருப்புகளில் பணியாளர்கள் சிலர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். மற்ற குடியிருப்புகள் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. இதனால் கட்டடம் சேதம் அடைந்த நிலையில் முட்புதர்களால் சூழ்ந்து உள்ளன. சுற்றுச் சுவர் வசதி இல்லாததால் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி உள்ளன. மழை காலங்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மின் பணியாளர் குடியிருப்புகளை சீரமைத்து பயன் பாட்டிற்கு கொண்டு வர மின்வாரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.