அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்து மின்வாரிய ஊழியர் தற்கொலை முயற்சி
மூணாறு; உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து மின்வாரிய ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கேரளா, சேர்த்தலையைச் சேர்ந்தவர் திலீப்குமார் 50. இவர், இடுக்கி மாவட்டம் பீர்மேடு பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார்.இவர் இரு நாட்களுக்குமுன் மாலை 6:30 மணிக்கு மின்வாரிய குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மின்வாரிய ஊழியர்கள் 'வாட்ஸ் அப்' குழுவில் பதிவிட்டார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் குடியிருப்புக்கு ஓடிச் சென்றனர். அங்கு தூக்கில் தொங்கி உயிருக்கு போராடியவரை மீட்டு பீர்மேடு தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.காரணம் குறித்து திலீப்குமார் 'வாட்ஸ் அப்'பில் பதிவிட்டு கூறியிருந்தாவது: மின்வாரிய உயர் அதிகாரிகள் தனக்கு பதவி உயர்வு உள்பட எவ்வித சலுகைகளும் வழங்காததால், கேரள உயர்நீதி மன்றத்தை அணுகி சாதகமான தீர்ப்பை பெற்றேன். அதனை உயர் அதிகாரிகள் கடைபிடிக்காததால் பதவி உயர்வு பெற கடந்த 16 ஆண்டுகளாக போராடி வருகிறேன். சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நான் ஐ.என்.டி.யு.சி. தொழிற் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் உதவி கேட்டதால் தனிமை படுத்தபட்டேன் என அழுதபடி கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.